Saturday, September 8, 2007

லைலத்துல் கத்ர் - 27?


'நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியம் மிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) சகலகாரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்), அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.' (அத்தியாயம் 97 ஸுரத்துல் கத்ரி - 1முதல் 5வரையிலான வசனங்கள்)என லைலத்துல் கத்ர் இரவைப்பற்றி அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடுகிறான்.


இந்த லைலத்துல் கத்ர் இரவு எப்போது, அதில் நம்முடைய வணக்க வழிபாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை குர்ஆன் - ஹதீஸ் ஒளியில் ஆய்வு செய்வோம்.


லைலத்துல் கத்ர் இரவு ரமலான் மாதத்தின் 27ஆம் இரவில்தான் என இஸ்லாத்தில் பெரும்பான்மையான மக்கள் விளங்கி வைத்துள்ளனர். அவர்கள் அவ்வாறு விளங்கிக் கொண்டதற்கு காரணத்தையும் கூறுகின்றனர். லைலத்துல் கத்ர் இரவு பற்றி அல்லாஹ் இறக்கிய மேற்படி அத்தியாயத்தில் லைலத்துல் கத்ர் என்ற வார்த்தை மூன்று முறை வருகிறது. மேற்படி மூன்றை ஒன்பதைக் கொண்டு பெருக்கினால் இருபத்திஏழு. எனவே இருபத்தி ஏழாம் இரவில்தான் லைலத்துல் கத்ர் என்று, குர்ஆனிலும், ஹதீஸிலும் இல்லாத ஒரு 'அரிய?..!' விளக்கத்தைத் தருகின்றனர். மேற்படி விளக்கத்தைத் தருவதோடு மட்டுமில்லாமல் இஸ்லாமிய மார்க்கத்தை ஓர் சடங்கு மார்க்கமாக கருதிய பலர், ரமளான் மாதத்தின் ஒரு சில குறிப்பிட்ட நாட்களில் (அதாவது வெள்ளி, திங்கள், மற்றும் 27ஆம் இரவு ஆகிய நாட்களில்) பள்ளிகளில் நிரம்பி வழிவர். குறிப்பாக இருபத்தி ஏழாம் இரவில் மாத்திரம் அதுவரை கண்டிராத கூட்டம் பள்ளியில் அலைமோதும்.



அன்றைய இரவில் பள்ளிகள் அலங்கரிக்கப்பட்டும், பண்டங்கள், பழங்கள் குவியவும் காரணமாக அமையும். அந்த நிலை சரியானதுதானா என்பதை இந்த கட்டுரையில் ஆய்வு செய்வோம்.


'தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம். நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.' (அத்தியாயம் 44 ஸுரத்துத் துகான் - 2முதல் 4வரையிலான வசனங்கள்) என அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கூறுகிறான்.

அருள்மறை குர்ஆன் யாருக்கு அருளப்பட்டதோ, அந்த அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் பற்றி என்ன விளக்கமளிக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

சில நபித்தோழர்கள் லைலத்துல் கத்ரு, கடைசி ஏழு இரவுகளில் இருப்பதாக கனவு கண்டு நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் கனவைப்போல் நானும் கண்டேன். எவர் (லைலத்துல் கத்ர்) இரவை அடைய முயற்சிக்கின்றாரோ, அவர் கடைசிப் பத்தில் தேடட்டும்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதார நூல்: புஹாரி)'

லைலத்துல் கத்ரை அறிவிப்பதற்காக நான் வெளியில் வந்தேன் அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தார்கள். அவ்விருவருடனே ஷைத்தான் இருந்தான். எனவே நான் அதை மறந்துவிட்டேன். எனவே அதை (லைலத்துல் கத்ரை) கடைசி பத்து நாட்களில் தேடுங்கள்' (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) நூல்: முஸ்லிம், அஹ்மத்)

மேற்குறிப்பிட்ட ஹதீஸ்கள் யாவும் பொதுவாக லைலத்துல் கத்ர் பிந்திய பத்து இரவுகளில் இருப்பதாகத் தெரிவிக்கின்றன.'லைலத்துல் கத்ரு இரவை ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான இரவுகளில் நீங்கள் தேடுங்கள்' - (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) ஆதார நூல்: புஹாரி)மேற்படி ஹதீஸிலிருந்து லைலத்துல் கத்ர் இரவு பிந்திய பத்துக்களில், குறிப்பாக ஒற்றைப்படையான ஐந்து இரவுகளில் இருக்கிறது என்பதை அறியமுடிகிறது.

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்த செய்திகள் இருக்க, மூன்றை ஒன்பதால் பெருக்கினால் வரும் விடை 27. அந்த 27ஆம் இரவில்தான் லைலத்துல் கத்ர் இரவு என்ற 'அதிமேதாவித்தனமான' விளக்கத்தை இவர்களுக்கு அளித்தது யார்?. இறைத்தூதருக்கும் மேலாக லைலத்துல் கத்ர் பற்றிய விளக்கம் அளிக்க வேறு எவருக்கும் அருகதையேதும் உண்டா? எவரோ அளித்த ஆதாரமற்ற விளக்கத்தை வைத்துக் கொண்டு, அந்த 27ஆம் இரவில் மாத்திரம் தொழுதுவிட்டு மற்ற ஒன்பது இரவுகளையும் வீணே விட்டுவிடுவது சரிதானா? இல்லை முறைதானா? அவ்வாறு தொழும் அந்த 27ஆம் இரவில்கூட பழங்கள், பதார்த்தங்கள், நேர்ச்சை பொட்டலங்கள் என்று அமர்க்களப்படுத்தப்படுவதெல்லாம் இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட செயலா?

'லைலத்துல் கதர் இரவின்' சிறப்புக்களைப் பற்றி அறிந்தால், மார்க்கத்தில் இல்லாத செயல்களைச் செய்ய மனம் இடம் கொடுக்குமா?லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புக்கள்லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புக்கள் பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவித்த ஹதீஸ் ஒன்றை காண்போம்:

'யார் லைலத்துல் கத்ரு இரவில் நம்பிக்கையோடும் (அல்லாஹ்விடம் கூலியை) எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்' (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் சொன்ன வணக்கத்தை நாம் எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதற்கு அவர்கள் காட்டித் தந்த வழிமுறையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.


லைலத்துல் கத்ரும் பிரத்யேகத் தொழுகையும் லைலத்துல் கத்ர் இரவுக்கென்று நபி (ஸல்) அவர்கள் எந்தவொரு பிரத்யேகத் தொழுகையையும் காட்டித் தரவில்லை. அவ்வாறு பிரத்யேகத் தொழுகை எதுவும் இல்லை என்பதற்கு கீழக்காணும் ஹதீஸே போதிய ஆதாரமாகும்.

'ரமளானில் நபி(ஸல்) அவர்கள் தொழுகை எவ்வாறு இருந்தது என்று நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டபோது, ரமளானிலும், ரமளான் அல்லாத மாதங்களிலும் நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத் (8103) மேல் தொழுததில்லை என்று விடையளித்தார்கள்.' (அறிவிப்பவர்: அபூஸலமா (ரலி) ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி).

மேற்படி ஹதீஸில் கூறப்பட்ட பதினொரு ரக்அத் இரவுத் தொழுகையைத்தான் நபி (ஸல்) அவர்கள் - தொழுகையின் நிலை, குர்ஆனை ஓதுதல், ருகூவு, ஸுஜுது போன்றவற்றை தகுந்த முறையில் நீட்டி, ஸஹர் நேரம் தப்பிவிடுமோ என்று கருதும் அளவுக்குத் தொழுதிருக்கின்றார்கள். இவ்வாறானத் தொழுகையைத்தான் நாமும் தொழ வேண்டும். அதை விட்டுவிட்டு, இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத தஸ்பீஹ் தொழுகை, குல்குவல்லாஹு ஸுராவை நூ று தடவை ஓதி தொழும் தொழுகை, என நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தராத வணக்கவழிபாடுகளையெல்லாம் இஸ்லாமியர்களில் பெரும்பாலோர் செய்து வருவது எதன் அடிப்படையில் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.


லைலத்துல் கத்ர் இரவில் சொல்ல வேண்டிய பிரார்த்தனை'அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எந்த இரவு என்று நான் அறிய நேர்ந்தால், அந்த இரவில் நான் என்ன சொல்ல வேண்டும் என்று கேட்டதற்கு,'அல்லாஹும்ம இன்னக்க அப்வுன் துஹிப்புல் அஃபஃவ ஃபஃபு அன்னி' (யா! அல்லாஹ்! நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன். என்னை நீ மன்னித்து விடு!) என்று கற்றுக் கொடுத்தார்கள்.' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா, திர்மிதி)

பள்ளியில் தங்கி இருத்தல் (இஃதிகாஃப்)அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்களிலும் பள்ளியில் தங்கி இருந்து, மற்ற நாட்களைவிட அதிகமான அளவு வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாக கீழ்கண்ட ஹதீஸ்கள் ஆதாரமாக அமைந்துள்ளன.'நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசி பத்து நாட்களில் அவர்கள் மரணிக்கும்வரை இஃதிகாஃப் (பள்ளியில் தங்கி) இருந்தார்கள்.' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)'


நபி (ஸல்) அவர்கள் மற்ற எந்த நாட்களிலும் வணக்கத்தில் ஈடுபடாத அளவுக்கு ரமளானின் பிந்திய பத்துக்களில் வணக்கத்தில் ஈடுபடுவார்கள்' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்: முஸ்லிம்)'


அல்லாஹ்வின் திருத்தூதர், அண்ணல் நபி(ஸல்) அவர்கள் (ரமளானின்) பிந்திய பத்து இரவுகள் வந்ததும் வணக்கத்தில் ஈடுபட முழுமையாக ஆயத்தமாகி விடுவார்கள். இரவை வணக்கத்தில் கழிப்பார்கள். தனது குடும்பத்தையும் விழிக்கச் செய்வார்கள்' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம்)


மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ரமளானின் பிந்திய பத்து இரவுகளில் முன்னெப்போதையும்விட அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள் என்பது தெளிவாகிறது.

அதுவும் (இஃதிகாஃப்) பள்ளியிலேயே தங்கி இறை நினைவில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது.நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறை இவ்வாறு இருக்க, நம் மக்களில் பலர் அடையாளம் தெரியாத நபர் யாரோ சொன்ன 'அதிமேதாவித்தனமான' விளக்கத்தை வைத்துக்கொண்டு, ரமளானின் 27ஆம் இரவில் மட்டும் ஏனோதானோ என்று பள்ளிக்கு வருவதும், மற்றுமுள்ள நாட்களிலும் இறை மன்னிப்பைத் தேடுவதை விட்டுவிட்டு, வீட்டில் குறட்டை விடுவதும் சரியானதா?அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த இஃதிகாஃப் (பள்ளியில் இறை நினைவுடன் தங்கியிருத்தல்) இன்று நம் மக்களின் நடைமுறையில் இல்லை. இதற்கு காரணம் ஏனெனில் இஃதிகாஃப் இருக்கும்போது அவசியமான காரியங்களுக்குக் கூட பள்ளியைவிட்டு வெளியேறக்கூடாது என்று காட்டப்படுவதும், அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இறைநினைவுடன் தங்கியிருந்த முறை மக்களுக்கு சரியாக எடுத்துக் காட்டப்படாததுமே ஆகும்.


அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறைநினைவுடன் பள்ளியில் தங்கியிருந்த முறையை பார்ப்போம்.'நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்க நாடினால் ஸுப்ஹுதொழுதுவிட்டு இஃதிகாஃப் இருக்கும் இடம் சென்றுவிடுவார்கள்' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்கள்: திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத்)'

நபி(ஸல்) அவர்கள் (ஈதுல் பித்ரு) பெருநாளன்று (காலை) உணவு உண்டு, பெருநாள் தொழுகை முடிக்காத வரை (இஃதிகாஃபை) விட்டு வெளியே வரமாட்டார்கள்'. (அறிவிப்பவர்: புரைதா (ரலி) ஆதார நூல்கள்: திர்மிதி, ஹாகிம், அஹ்மத்)

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது (மிக முக்கியமான அவசியத் தேவைகளைத் தவிர) பள்ளியைவிட்டு வெளிவரமாட்டார்கள் என்பது தெளிவாகிறது.

பள்ளியில் தங்கி இருக்கும்போது (இஃதிகாஃப்) அனுமதிக்கப்பட்டவை'நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது மனிதனின் அவசியத் தேவை (மலஜலம் கழித்தல்)க்காகத் தவிர வீட்டிற்குச் செல்லமாட்டார்கள்' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)'


நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும்போது நான் வீட்டில் மாதவிடாய்க்காரியாக இருந்து கொண்டே அவர்களது தலையை வாரிவிடுவேன். அவர்கள் தமது தலையை (மட்டும்) வீட்டுக்குள் நீட்டுவார்கள்.' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)'


நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். இரவில் அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். பின்னர் நான் புறப்படுவதற்காக எழுந்தேன். என்னை வீட்டில் விடுவதற்கு அவர்களும் எழுந்தார்கள்.' (அறிவிப்பவர்: சபிய்யா (ரலி) ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து இஃதிகாஃப் இருப்பவர் மிக முக்கியமான அவசியத் தேவைகளுக்காக மாத்திரம் வீடுகளுக்குச் செல்வது அனுமதிக்கப்பட்டவையே என்பதை அறியலாம்.

பள்ளியில் தங்கி இருக்கும்போது (இஃதிகாஃப்) அனுமதிக்கப்படாதவை.
அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:'நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்.' (அத்தியாயம் 2 ஸுரத்துல் பகரா - 187வது வசனத்தின் ஒரு பகுதி)'இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமல் இருப்பதும், ஜனாஸாவில் பங்கெடுக்காமல் இருப்பதும், மனைவியை தீண்டாமல் இருப்பதும், அணைக்காமல் இருப்பதும், அவசியத் தேவையை முன்னிட்டேத் தவிர வெளியில் செல்லாமல் இருப்பதும் நபி வழியாகும்' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)


மேற்குறிப்பிட்ட இறைமறை வசனத்திலிருந்தும், நபி (ஸல்) அவர்களின் நடைமுறையில் இருந்தும் பள்ளியில் தங்கி இருக்கும்போது அனுமதிக்கப்படாதவை எவை என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

லைலத்துல் கத்ர் இரவும், முஸ்லிம்களில் பெரும்பாலோரின் நடைமுறையும்தஸ்பீஹ் தொழுகை, குல்குவல்லாஹு ஸுராவை நூறு தடவை ஓதி தொழும் தொழுகை, ராத்திபுகள், குர்ஆன் ஓதி கத்தம் செய்தல், குர்ஆனில் வரும் ஸஜ்தா வசனங்கள் அனைத்தையும் அந்தந்த அத்தியாயத்தோடு ஓதி ஸஜ்தா செய்யாமல் மொத்தமாக 27ஆம் இரவில் ஓதி ஸஜ்தா செய்வது போன்றவை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தராத, நாமே உருவாக்கிக் கொண்ட நூதனங்கள் (பித்அத்) ஆகும்.


இதுபோன்ற நூதனங்களை தவிர்ப்போம்.லைலத்துல் கத்ர் இரவிலும், ரமளானின் கடைசி பத்திலும், அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களும் அனுமதித்தவைகளை நடைமுறைப்படுத்துவோம். அனுமதிக்காதவைகளை தவிர்ந்து நடப்போம். அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களும் கற்றுத் தந்த வழியில் நம் வணக்க வழிபாடுகளை அமைத்துக்கொள்வோம். அதற்குரிய அறிவையும், ஆற்றலையும், பக்குவத்தையும் தர வல்ல அல்லாஹ்வையே பிரார்த்திப்போம்.

Article from : http://www.tamilmuslim.com/

ரமலான் குர்ஆன் மாதம்



ரமலான் குர்ஆன் மாதம் இம் மாதத்தில் ஒவ்வொரு தொழுகைக்கு பின்னும் 4 அல்லது 5 பக்கங்கள் ஒதினால் 30 நாட்களில் குர்ஆனை முடித்துவிடலாம்


Monday, September 3, 2007

ரமளான் எதிர்பார்க்கும் இலட்சியம்

ஹதீஸ் தெளிவுரை: எம். ஏ. ஹபீழ் ஸலபி, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை

நன்றி: உண்மை உதயம், நவம்பர் 2002 (கணிணியாக்கம்: அபூ-இஸாரா)

'யார் பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ, அவர் பசித்திருப்பதாலும், தாகித்திருப்பதாலும் அல்லாஹ்வுக்கு எத்தகையத் தேவையுமில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ-ஹுரைரா (ரலி), ஆதார நூல்: புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூ-தாவூத்).

அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, அவனுக்காக நாம் நோன்பு நோற்கின்றோம். நோன்பை நோற்பதன் மூலம் நம்மிடத்தில் என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டுமோ, அவை ஏற்பட்டிருக்கின்றனவா? இல்லையா என்பதை நாம் சுயபரிசோதனை செய்யக் கடமைப் பட்டுள்ளோம். அல்லாஹ் எவைகளைச் செய்யச் சொன்னானோ, அவற்றை முழு மனதுடன் செய்வது போலவே, எவைகளைத் தவிர்க்கச் சொன்னானோ அவற்றையும் கண்டிப்பாகத் தவிர்ந்து நடக்க வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடக்கும்போது அதற்கான நற்கூலிகள் வழங்கப்படும். எவைகளை அல்லாஹ் தேவையில்லை என்ற தடுத்தானோ, அவை மீறப்படும்போது தண்டனையைத் தயார் படுத்துகின்றான். ஒவ்வொரு நிமிடமும் நான் ஒரு அடிமை என்ற நன்றி உணர்வோடு நாம் வாழ வேண்டும். குறிப்பாக ரமழான் மாதத்தில் மிகுந்த பக்குவத்துடன் அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். தீமைகளை விட்டும் தூரமாகி, பரிசுத்தமான வாழ்வின் பக்கம் மீள வேண்டும். இதையே அல்லாஹ் எதிர்பார்க்கிறான்.

எந்த இலட்சியத்தை அடைவதற்காக நோன்பு நம்மீது கடமையாக்கப்பட்டதோ, இந்த உன்னத இலட்சியத்தை மறந்து விடுகிறோம். எல்லோரும் நோன்பு நோற்கிறார்கள் என்பதற்காக நாமும் நோன்பு நோற்று, பசியோடும், தாகத்தோடும் இருப்பதில் எத்தகைய நன்மையும் கிட்டுவதில்லை. எனவே, நோன்பாளிகள் எவற்றைத் தவிர்ந்து நடந்து கொள்ள வேண்டுமோ, அவற்றைத் தவிர்ந்து நடந்து கொள்ள வேண்டும். நோன்பு நோற்பதினூடாக மனிதனிடம் என்ன எதிர்பார்க்கப்படுகின்றது என்பதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் மேலே சுட்டிக் காட்டியுள்ள ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

ஒரு முஃமின் தனது வாழ்வின் ஒவ்வொரு கனப் பொழுதிலும் அல்லாஹ்வை அஞ்சி வாழ்வதோடு, தீமைகளை விட்டும் ஒதுங்கி இருக்க வேண்டும். பொய், புரட்டு, பித்தலாட்டம், தவறான நடவடிக்கைகள் போற்றவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும். அதே போல் நோன்பு காலங்களில் கண்டிப்பாக தீய நடவடிக்கைளிலிருந்து மிகத் தூரமாகி இருக்க வேண்டும் என்பதையே மேற்குறிப்பிட்ட நபிமொழி நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. நபி(ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைக்கு நாம் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றால் ரமழான் நம்மில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நோன்பைப் பாழ் படுத்தும் நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் சர்வ சாதாரணமாக ஈடுபட்டுக் கொண்டே தாங்கள் நோன்பாளிகள் என்கின்றனர். அதனால்தான், பல ரமழான் மாதங்கள் நம்மைக் கடந்து சென்றாலும் நம்மில் எத்தகைய மாற்றமும் நிகழவில்லை. எப்போது அல்லாஹ் அருளிய வேதம் அல்-குர்ஆனும், அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறியும் புறக்கணிக்கப்படுகின்றதோ, அப்போது நாம் பெறும் பேறுகள் வெறும் பூஜ்ஜியமாகவே இருக்கும். எனவே நபி(ஸல்) அவர்களிள் எச்சரிக்கைக்கு நாம் முக்கியத்துவம் அளித்து நம்முடைய நல் அமல்களை நாம் பாழ்விடுத்தி விடாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இறையச்சமில்லாத எந்த ஒரு வணக்கத்தையும் அல்லாஹ் பொருந்திக் கொள்ள மாட்டான். சிறிய அளவே அமல் செய்தாலும், செய்த அந்த அமல் இறையச்சத்துடன் அமைந்து விடுமானால் இறைவன் பூரண திருப்தி அடைவான்.

இறை திருப்தியை மட்டும் நாடி மட்டும் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வணக்க வழிபாட்டை, அற்பமான தீய நடிவடிக்கைகளால் வீணாக்கி விடக்கூடாது. எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்மறை குர்ஆனிலே கூறுகிறான்:

'ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்' (அத்தியாயம் 2 ஸூரத்துல் பகரா - 183 வது வசனம்).

இவ்வசனத்தின் மூலம் நோன்பு எதற்காக என்பதை வல்ல அல்லாஹ் தெளிவாகக் சுட்டிக் காட்டுகிறான். எனவே நோன்பு நோற்பதால் சிறந்த இறையச்சம் ஏற்பட வேண்டும்.

நோன்பு நோற்றிருக்கும் வேளையில் நமது வீட்டிலிருக்கும் உணவை இறையச்சத்தின் காரணமாக உண்ணாமல் தவிர்த்து விடுகிறோம். நாம் தனியே இருக்கும் போது யாரும் பார்ப்பதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் தனியே இருக்கும் வேளையில் யாரும் பார்க்கமாட்டார்கள் என்றாலும், எல்லாம் வல்ல அல்லாஹ் ஒவ்வொரு கனமும் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்கிற நம்பிக்கை நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து விட்ட காரணத்தால் நாம் நோன்புடைய வேளைகளில் சாப்பிடுவதில்லை.

இதேபோல் ரமழான் அல்லாத காலங்களிலும் வல்ல அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்று உறுதியாக நம்ப வேண்டும். ரமழானில் விலக்கப்பட்ட காரியங்களைச் செய்ய முயலும்போது, இறைவனுக்குப் பயந்து அனுமதிக்கப்பட்ட காரியங்களைச் செய்வதையே நாம் தவிர்ந்து கொண்டதை சிந்திக்க வேண்டும். நம்மிடம் ஹலாலான உணவு இருந்தும், நோன்புடைய காலங்களில் நாம் உண்ணுவதில்லை. கட்டிய மனைவி இருந்தும் நோன்புடைய பகல் வேளைகளில் மனைவியைத் தீண்டுவதில்லை. இந்த ஆன்மீகப் பயிற்சிதான் நோன்பு கடமையாக்கப் பட்டதற்கான காரணம். இந்த ஆன்மீகப் பயிற்சியைப் பற்றிதான் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள். 'பசித்திருப்பதல்ல நோன்பின் நோக்கம்' என்பதை ஆழமாக விளக்குவதோடு, நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி எத்தகைய மாற்றங்களை நம்மிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

-: பொய் பேசாமை :-

பொய் பேசுவது பெரும்பாவங்களில் ஒன்றாகும் என்று அருள்மறை குர்ஆன் கூறுகிறது.

'ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்; ''என் இறைவன் அல்லாஹ்வே தான்!'' என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.'' (அத்தியாயம் 40 ஸூரத்துல் முஃமின் - 28வது வசனம்)

'..(நபியே!) நீர் கேளும் - மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ்; இத்தகைய அநியாயக்காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான்.' (அத்தியாயம் 6 ஸூரத்துல் அன்-ஆம் 144வது வசனத்தின் கடைசிப் பகுதி).

என அருள்மறை குர்ஆன் கூற, புனிதமிக்க ரமழானில்தான் பொய்களை அதிகமாகப் பேசுகின்றனர். மார்க்கம் என்ற பெயரால் புனைந்துரைத்து, சிறப்புக்கள் என சில 'அமல்'களையும் அதற்கான கூலிகளையும் அள்ளி வீசுகின்றனர். இறை இல்லங்களில் அல்லாஹ்வின் வேதமும், அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் தூய்மையானப் போதனைகளும் பேசப்படுவதற்குப் பதிலாக போலிகளை உலவ விடுகின்றனர் நம்மில் பலர். இவர்கள் நபி(ஸல்) அவர்களின் போதனைகளையும், எச்சரிக்கைகளையும் கவனத்தில் கொள்வதில்லை.

'உண்மையைக் கடைப்பிடியுங்கள். உண்மை நன்மையின் பக்கம் வழிகாட்டும். ஒரு மனிதன் உண்மையே பேசி, அதிலேயே தொடர்ந்து இருப்பானாயின் அல்லாஹ்விடத்தில் அவன் உண்மையாளன் எனப் பதியப்படுகின்றான். பொய்யைப் பயந்து கொள்ளுங்கள். ஏனெனில், பொய் தீமையின் பக்கம் வழிகாட்டுகிறது. ஒரு மனிதன் பொய்யுரைத்து அதில் மூழ்கியிருப்பானாயின் அல்லாஹ்விடத்தில் பொய்யன் எனப் பதியப்படுகின்றான்' என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது (ரலி), ஆதார நூல்: புகாரி, முஸ்லிம்).

பொய் பேசுகிறவன் அல்லாஹ்விடத்தில் பொய்யன் எனப் பதியப்பெறுவதுடன், அவன் செல்லுமிடம் நரகமாகவும் இருக்கும். இன்று நம்மவர்கள் மத்தியில் பொய் பேசுவது மலிந்துள்ளது. எவ்வளவோ பேர் மார்க்கத்தின் பெயரால்; எத்தனையோ பொய் சொல்கிறார்கள். நம்மில் அதிகமானவர்களிடம் பொய் சொல்வது ஒன்றும் தப்பில்லை என்ற எண்ணம் உள்ளது. அதனால்தான் சர்வ சாதாரணமாக, சளைக்காமல் பொய் சொல்லும் கலையில் ஆற்றல் பெற்றுத் திகழ்கின்றார்கள். பொய் சொல்வதைப் பெரிய திறமையாகவும் கருதுகின்றார்கள். பொய் சொல்லாமல் இந்தக் காலத்தில் எப்படி வாழமுடியும் என்று முஸ்லிம்களே கேள்வி கேட்கும் நிலை! பொய் சொன்னால் மறுமையில் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சமும் முஸ்லிம்களிடம் எடுபட்டுப் போய்விட்டது.

'எவனிடம் நான்கு விடயங்கள் இருக்கின்றனவோ, அவன் நயவஞ்சகனாவான். நான்கில் ஒன்றிருந்தாலும் நயவஞ்சகத்தின் ஒரு பகுதி உள்ளவனாவான். அதைவிடும் வரை நயவஞ்சகனாவான்.

1. பேசினால் பொய்யுரைப்பான்

2. வாக்களித்தால் மாறு செய்வான்

3. வழக்காடினால் அநீதியிழைப்பான்

4. உடன்படிக்கைச் செய்தால் அதை மீறுவான். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.)

இன்று எமது வியாபாரம், கொடுக்கல், வாங்கல், குடும்ப விவகாரம், அண்டை அயலவர்கள் தொடர்பு என்று எல்லா அம்சங்களிலும் முஸ்லிம்களிடம் பொய் மிகைத்து நிற்கிறது. எனவே இந்த நோன்பின் மூலம் பயிற்சி பெற்று, பொய் சொல்வதிலிருந்து எம்மைத் தடுத்துக் கொள்ளவில்லையானால் நாம் நோன்பு நோற்கவில்லை. வெறும் பட்டினிதான் கிடந்துள்ளோம் என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக ரமழான் காலங்களில் மார்க்கம் அதன் சிறப்பு என்ற பெயரால் பொய் போசுவது கண்டிப்பாக நிறுத்தப்படவேண்டும். தமக்குத் தோன்றியதையெல்லாம் மார்க்கம் என்று பேசும் மடமை நிலை மாற வேண்டும். 'கேள்விப்பட்டதையெல்லாம் ஒருவன் பேசுவது அவன் பொய்யன் என்பதற்குப் போதிய ஆதாரமாகும்' (முஸ்லிம்).

மார்க்கம் என்ற பெயரில் பத்திரிக்கையில் பிரசுரிக்கப்படுவதும், தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலமாக மக்களுக்கு ஒலி-ஒளி பரப்பப்படுவதும் சிலருக்கு ஆதாரமாகிகிட்டது. மூன்று நாள், பத்து நாள், நாற்பது நாள் என்று ஊரை விட்டு அடுத்த ஊருக்குச் சென்று வந்தவர்களெல்லாம் தமது வாயில் வந்ததெல்லாம் மார்க்கம் என்று பேசி தூய்மையான இஸ்லாத்தை மலினப் படுத்துகிறார்கள். எங்கோ கேட்டதெல்லாம் மார்க்கம் என்று ஒரு சாரார் பேசும்போது மற்றொரு சாரார் பக்தி சிரத்தையோடு கேட்கின்றனர். இது ரமழான் காலங்களில் அதிகரித்து வருகிறது. நபி(ஸல்) அவர்களின் மீது இட்டுக் கட்டுவதும், பொய் கூறுவதும் தனது இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்வதற்குரிய கொடிய குற்றமாகும். மக்களின் பாமரத் தன்மையைப் பயன்படுத்தி இவ்வாறு நடந்து கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு இறை இல்ல நிர்வாகங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'மாபெரும் சதியாதெனில், மற்றவன் உண்மையென நம்பக்கூடியவாறு பொய் பேசுவதாகும்' (அஹ்மத்) எனவே நாவை அடக்குவது அவசியம். நாவினால் ஏற்படும் பெரிய தீமை பொய்யாகும். ஆகவே பொய்யுரைக்காது நாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பொய், வாழ்க்கையின் எந்தத் துறையிலும் நுழைந்துவிடாதவாறு இஸ்லாம் மிகக் கவனமாக வழி நடத்துகிறது.

பொய், பொய்சாட்சி, பொய் சத்தியம், பொய் வாதம், மார்க்கத்தின் பெயரால் புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடுதல் போன்ற தீய கொடூரங்களை, துரோகங்களைத் தவிர்ப்பதற்காக நோன்பு என்கிற ஆன்மீக பயிற்சிக் கூடத்தை இஸ்லாம் ஒருமாத காலம் ஏற்பாடு செய்து தந்துள்ளது. அடியான் பட்டினி கிடப்பதால் எஜமானனுக்கு எந்தவித நன்மையும் ஏற்பட்டு விடுவதில்லை. கடமையான நோன்பினை ஒரு மாத காலம் இறை நம்பிக்கையாளர்களிடம் நோற்கச் செய்துவிட்டு, அவர்கள் பொய் சொல்லாமல், பொய்யான, தீமையான நடவடிக்கைளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என அல்லாஹ் எதிர்பார்க்கிறான். இந்தப் பண்புகளை தன் அடியார்களிடமிருந்து வெளிப்படுத்தவே நோன்பைக் கடமையாக்கியுள்ளான். ரமழானுக்குப் பின்னரும் இந்த நல்ல பண்புகள் தொடருமானால், இறை நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் சகோதரத்துவ இணக்கம், நம்பிக்கை, நல்லுறவு நிலவும்.

'எவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசிக்கிறாரோ அவர் நல்லதைப் பேசட்டும், அல்லது மௌனமாக இருக்கட்டும்' (புகாரி, முஸ்லிம்).

-: தீய நடவடிக்கையிலிருந்து ஒதுங்குதல் :-

நாம் நோற்கும் நோன்பு, நம்மைத் தீய நடவடிக்கையிலிருந்து தடுக்க வேண்டும். இது நம்மை நல்ல வழிகளில் செல்லத் தூண்ட வேண்டும். ரமழானிலும் நாம் நமது தீய செயல்களை மாற்றவில்லை என்றால், நமது ஈமானை நாம் மீள் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். 'இபாதத்' செய்வதற்கும், மன அமைதி பெறுவதற்கும் நோன்பு ஓர் அரிய வாய்ப்பு. இந்த அரிய வாய்ப்பை நாம் பயன்படுத்தவில்லையெனில் நாம் துர்பாக்கியசாலிகள். குறிப்பாக இஸ்லாமிய இளைஞர்கள் அதிகமான தீமைகளில் ஈடுபடுகின்றனர். மற்றவர்களின் தூக்கத்திற்கு இடையூறாக நடந்து கொள்கின்றனர். இளைஞர்களின் பெற்றோர்கள் கூட இவர்களைக் கண்டிக்க முடியாத நிலை. அல்லது கண்டிக்கத் தவறுகின்றனர்.

'ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம், ''உண்மையான ஓட்டாண்டி (நஷ்டவாளி) யார் என்பதை நீங்கள் அறிவீர்களா? எனக் கேட்க, அதற்குத் தோழர்கள் யாரிடம் திர்ஹமோ, பொருட்களோ அற்ற வறுமை நிலை தோன்றுகின்றதோ அவரே ஓட்டாண்டியாவான்' என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் என் சமூகத்தில் உண்மையான ஓட்டாண்டி யாரெனில், அவர் தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற வணக்க வழிபாடுகளையும் அதிகமாக நிறைவேற்றியவராக மறுமையில் வருவார். அதே நேரம் அம்மனிதர் ஒருவரை ஏசியிருப்பார். இன்னொருவரைப் பற்றி அவதூறு கூறியிருப்பார். வேறொருவரின் சொத்துக்களை (அநியாயமான முறையில்) சாப்பிட்டிருப்பார். அடுத்தவரின் இரத்தத்தை (நியாயமற்ற முறையில்) ஓட்டியிருப்பார். மற்றொருவரை அடித்திருப்பார். (இவ்வாறான நிலையில், இவரால்) குறித்த அநியாயத்திற்குட் படுத்தப்பட்டவர்கள் தமது முறையீடுகளை (அல்லாஹ்விடம்) தெரிவித்து விண்ணப்பிப்பர். அவ்வேளை அவர்களின் மத்தியில் இவரது (இபாதத் மூலம் கிடைத்த) நன்மைகள் பகிர்ந்தளிக்கப்படும். குறித்த அநியாயக்காரன் பற்றிய (குற்ற) முறையீடுகள் முடிவடையும் முன்னர் அவரது நன்மைகள் முடிவடைந்துவிடும். எனவே முறைப்பாடு செய்பவர்களின் தீமைகளிலிருந்து எடுத்து, இவன் மீது சுமத்தப்படும். பின்னர் நரகில் எறியப்படுவான்'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ-ஹுரைரா (ரலி), ஆதார நூல்: முஸ்லிம்).

ரமழான் இறையச்சத்தையும், இபாதத்களையும் நம்மிடம் அதிகப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நாம் நஷ்டவாழிகள். ரமழானில்தான் முஸ்லிம்கள் மத்தியில் சண்டையும், சச்சரவும் அதிகமாக ஏற்படுகிறது. சமூகம் பிளவுண்டு சின்னா பின்னமாகிறது. அதுவும் மார்க்கம் அல்லாததை மார்க்கம் என்று கருதி பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறது. வீண் வம்பு கூடாது என்ற மார்க்கத்தில் அதுவும் மார்க்கம் என்ற பெயரால், மற்ற முஸ்லிம்களின் இரத்தத்தைக் கூட ஓட்டத் துணியும் அயோக்கியத்தனம் மாற வேண்டும். இறை இல்லங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானது. அங்கு தூய முறையில் வணங்கவும், வழிபடவும் முஃமீன்களுக்கு உரிமையுண்டு. அதைத் தடுக்க இவ்வுலகில் யாருக்கும் உரிமையில்லை. சுதந்திரமாக வழிபட எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. ஆகவே பள்ளியில் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

மற்றவர்களின் சுதந்திரம் பறிக்கப்படும்போதுதான் பிரச்னைகள் எழுகின்றன. எல்லோருக்கும் சம உரிமை உண்டு. மக்கள் உண்மைக்குத் தலைவணங்கும் காலம் கனிந்து வருகிறது. எனவே, தவறான சிந்தனையில் மூழ்கியிருப்பவர்கள் இந்த ரமழானிலாவது தமது நிலையை மாற்றிக்கொள்ள முனைவதோடு தவறான அணுகுமுறைகளை விட்டு அறிவு வழியில் அமைதியான விடயங்களைக் கருத்தாடலுக்கு வழிவகுக்க உடன்பட வேண்டும்.

'உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் முட்டாள் தனமாக நடந்து கொண்டால், நான் நோன்பாளி என்று கூறட்டும்' என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதார நூல்: புகாரி, திர்மிதி).

நம்முடன் யாரேனும் சண்டைக்கு வந்தால், அல்லது திட்டினால் பொறுமை செய்வது அவசியமாகும். ரமழானில் நோன்பு நோற்று பயிற்சி பெற்றவர்கள், நோன்பை நிறைவு செய்தவுடன் பெருநாள் அன்று இஸ்லாம் ஹராமாக்கிய காரியங்களில் (அதாவது திரைப்படங்களை பார்ப்பது, மது அருந்துவது, இன்னும் பல கேலிக் கூத்துக்களில் ஈடுபடுவது) ஈடுபடவும் செய்வார்கள் என்றால், இவர்கள் வீணாக பட்டினி கிடந்தார்கள் என்று கூறலாமேத் தவிர, இவர்கள் நோன்பு நோற்றார்கள் என்று கூற முடியாது. ரமழானுக்கு முன்னர் எந்த நிலையில் இருந்தார்களோ, அதே நிலையில்தான் இனியும் இருக்கப் போகிறார்கள் என்றால் புனித ரமழானால் எந்தவித பயனையும் பெறவில்லை என்பதுதான் இதன் பொருள்.

அதேபோல் நம் சமுதாயத்தின் இளம்யுவதிகள் அரட்டை அடிப்பதிலும், புறம்பேசுவதிலும், கோள் சொல்வதிலும், 'சூரியன்' 'வெற்றி' 'சக்தி' 'தென்றல்' போன்ற தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒலி-ஒளி பரப்பப்படும் மெகாத்தொடர்கள் முதல் கெகாத் தொடர்கள்வரை பார்ப்பதில் தங்கள் நேரத்தை வீணடிப்பதிலும் கழிப்பார்கள் என்றால் அவர்கள் நோற்ற நோன்பால் எந்தவித பயனும் கிடைக்கப் போவதில்லை. இன்று நோன்பு நோற்றுக் கொண்டு கலப்படம், மோசடி, இலஞ்சம், ஊழல், போன்ற தீய செயல்களில் ஈடுபடுவது பொய், புறம், பேசுவது ஆகிய காரியங்களில் சர்வ சாதாரணமாக முஸ்லிம்கள் ஈடுபடுகின்றனர். இவ்வாறு ஈடுபடுவர்கள் தாம் பசியோடு இருப்பது மட்டும்தான் இறைவனுக்குத் தேவை என்று எண்ணுகிறார்களா?

-: அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் :-

ஹதீஸின் இறுதிப்பகுதி அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் என்று கூறி நிறைவடைகிறது. பல ஹதீஸ்களும், ஹதீஸ் குத்ஸியும் அல்லாஹ் மனிதர்களிடமும், ஏனையவற்றிடமும் தேவையற்றவன் என்று பிரகடனப்படுத்துகின்றன. நாம் நோன்பு நோற்பதால் அல்லாஹ்வின் மாட்சிமையில் எதுவும் கூடிவிடுவதுமில்லை: நாம் நோன்பு நோற்காததால் அவனது ஆட்சி அதிகாரத்தில் எதுவும் குறைவதுமில்லை.

'அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.' (அத்தியாயம் 112- ஸூரத்துல் இக்லாஸ் - 2வது வசனம்).

நாம் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, வழிப்பட்டு நடப்பது நமது நலனுக்குத்தான். உலக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்விடம் தமது தேவையை வேண்டி, அவன் உலக மக்கள் அனைவருக்கும் வழங்கினாலும், அவனது அருளில் ஒரு ஊசிமுனையளவு கூட குறைந்து விடாது. அதேபோல் அனைவரும் ஈமான் கொண்டு பயபக்தியுடன் வணங்கினாலும் அவனுக்கு எதுவும் கூடப்போவதுமில்லை. எனவே தூய்மையான எண்ணமில்லாத, வணக்கவழிபாடுகளில் எத்தகைய பயனும் இல்லை. முழுமையாக அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று வழிபட்டு நடந்து மறுமையில் அல்லாஹ் வழங்கக் காத்திருக்கும் சுவர்க்கத்திற்கு உரியவர்களாக நாம் மாற முனைய வேண்டும்.

குறிப்பாக இளைஞர்கள் யுவதிகள் தமது காலத்தையும், நேரத்தையும் வீணடித்துவிடாது இந்த ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தனக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ள முஃமீனாக வாழ்ந்து அல்லாஹ்வின் மார்க்கத்தை, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த விதத்தில் நிலைநாட்ட வேண்டும்.

எனவே நோன்பு நம்மிடம் எதிர்பார்க்கும் இலட்சியத்தை அடைந்து கொள்ள ஆவண செய்வோமாக!

'ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்' (அத்தியாயம் 2 ஸூரத்துல் பகரா - 183 வது வசனம்).

புனிதமிகு ரமழான் நம்மிடம் இறையச்சத்தை வேண்டி நிற்கிறது. அடுத்த ரமழானை நாம் அடைவோமா இல்லையா என்பதை யாரும் அறியோம். இந்த ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்தி, நல்லமல்கள் செய்து நல்லவர்களாக வாழ பயிற்சி பெறுவோமாக..!


Article from : www.tamilmuslim.com

ரமலான் ஒரு நல்ல வாய்ப்பு

தான் ஒரு இறையடிமை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் இன்னும் ஆழமாக இறைவனிடமும், உலகப் பார்வையாளர்கள் முன்பும் பதித்துக் கொள்ளும் மாதம். அனுமதிக்கப்பட்ட உணவுகளைக் கூட ஒதுக்கி வைத்து விட்டு பட்டினிக் கிடப்பதில் ஆனந்தம் கொள்ளும் அற்புதம் நிகழும் மாதம்.

இன்று நேற்றல்ல..

வருடந்தோரும் வரும் இந்த வசந்தம் துவங்கி சில நூறு ஆண்டுகளோ, அல்லது வெறும் ஆயிரம் ஆண்டுகளோ ஆகவில்லை. இதன் சரித்திரம் பல ஆயிரம் வருடங்களைக் கடந்ததாகும். இறைவன் நேசிக்கக் கூடிய, இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கக் கூடிய அடியார்கள் என்றைக்கு இந்த பூமியில் வாழத் துவங்கினார்களோ அவர்கள் காலத்திலிருந்து துவங்கியது இந்த வசந்தம்.

நோன்பு என்றால் என்ன?

மனிதன் தன் உள்ளத்தையும் உடலையும் பக்குவப்படுத்துவதற்கு எவ்வளவோ முயற்சி செய்கிறான். அவன் மேற் கொள்ளும் பல்வேறு முயற்சிகளை உள்ளடக்கியதாக நோன்பு அமைந்துள்ளது. எழுத்தில் இதை முழுமையாக விளக்க முடியாது. அனுபவத்தால் மட்டுமே உணரும் காரியமாகும் இது.

பசியின் தன்மை உணர்த்தப்படுகிறது.

வேண்டா கொழுப்புகள் குறைக்கப்பட்டு உடல் நலம் காக்கப்படுகிறது.

தீய எண்ணங்களும் செயல்களும் மனிதனை விட்டு விலகி ஓடுகின்றன.

பிறர் மீதான அக்கறையும் இல்லாதோருக்கு கொடுத்துதவும் மனப்பக்குவமும் கூடுகின்றது. அதிகமான இறை வணக்கங்களால் மனம் மிகுந்த அமைதிப் பெறுகிறது.

பாவக்கறை படிந்தவனாக இருக்கும் நிலையில் மனிதனை மரணம் வந்தடைந்து விடாமல் இருக்க இறைநம்பிக்கையாளர்களின் பாவங்களை அவனை விட்டு அகற்ற இந்த நோன்பு வழிவகுக்கிறது.

நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து எவர் ரமளானில் நோன்பு வைக்கிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று இறைத்தூதர் (ஸல்) கூறியுள்ளார்கள். (அபூஹூரைரா(ரலி) புகாரி முஸ்லிம் திர்மிதி)

நோன்பு எதற்கு?

பகல் நேரங்களில் மனிதனை வருத்தி அவன் தோற்றத்தை பலவீனப்படுத்துவது நோன்பின் நோக்கமல்ல பலவீனமாகவே படைக்கப்பட்ட மனிதனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக இறைவன் நோன்பை கடமையாக்கி இருந்தால் இரக்க குணமிக்க இறைவனின் பண்பிற்கு மாற்றமாக அது அமைந்து விடும். அதனால் மனிதனை பலவீனப்படுத்தத் தான் நோன்பு என்ற எண்ணமோ அர்த்தமோ தவறானதாகும்.

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது நீங்கள் உள்ளச்சமுடையோராய் ஆக வேண்டும் என்பதற்காக. (அல் குர்ஆன் 2:183)

மனிதனிடம் இறைவன் பற்றிய உள்ளச்சம் வந்து விட்டால் அவன் தூய்மையடைய அது வழிவகுத்துவிடும் இதற்கான முழு பயிற்சியையும் நோன்பின் மூலம் மனிதன் - ஓரிறை நம்பிக்கையாளர்கள் - பெற முடியும். உலகில் நடக்கும் கொடுமைகள் அனைத்திற்கும் இறைவன் பற்றிய அச்சமும் அவன் பற்றிய நம்பிக்கையும் இல்லாததேயாகும். நோன்பு தொழுகைப் போன்ற பயிற்சியின் வாயிலாக மனிதன் இறைவன் பற்றிய நம்பிக்கையையும் அச்சத்தையும் வளர்த்துக் கொள்ளும் போது அவன் மூலம் பிறருக்கு எவ்வித கெடுதிகளும் ஏற்படுவதில்லை. அல்லது மிகவும் குறைவான கெடுதிகளே அவனால் வெளிப்படும்.

இறைவனுக்காக ஒருவன் தனக்கு பிடித்த - அனுமதிக்கப்பட்ட - உணவுகளை பகல் பொழுதில் திரும்பிக் கூட பார்ப்பதில்லை பிறர் தூண்டினால் கூட உண்பதில்லை இவ்வாறு ஒருநாள் இரண்டுநாள் என்றில்லாமல் ஒருமாதம் முழுதும் பயிற்சி எடுக்கிறான் என்றால் அவனது இந்த பயிற்சியின் பக்குவம் மற்ற மாதங்களில் வெளிப்படவே செய்யும். இறைவன் விரும்பாத செயல்களிலிருந்து அவன் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொள்வான். இதன் மூலம் அவன் வாழ்வு நிம்மதி அடைவதோடு மட்டுமல்லாமல் அவன் வழியாக பிறரும் நிம்மதியும் - உதவியும் பெறுகிறார்கள்.

வருடந்தோரும் உலக முஸ்லிம்களை சந்தித்து விட்டு செல்லும் இந்த நோன்பின் மூலம் உரிய பயிற்சியைப் பெறாதவர்கள் பயனற்றவைகளுக்கு உதாரணமாகி விடுகிறார்கள்

வயிற்றுப் போக்கு நோயால் அவதிப்படும் ஒருவனுக்கு டாக்டர் சில மருத்துவ முறைகளை கையாள சொல்கிறார். மருத்துவரை சந்தித்து அவருக்குரிய பணத்தையும் கொடுத்து விட்டு மருந்து சீட்டையும் வாங்கி வரும் நோயாளி மருத்துவர் சொன்ன அறிவுரையை மட்டும் கடைப்பிடிக்கவில்லை என்றால் அவன் மருத்துவரை சந்தித்த சந்திப்பில் எப்படி ஒரு பிரயோஜனமும் இல்லாமல் போய்விடுமோ அதே போன்று தான் இந்த ஆன்மீக மருத்துவ மாதத்தை சந்தித்து அதில் பயிற்சிப் பெறாதவர்களின் நிலையுமாகும்.

தன் வயிற்றில் பிறந்த பிள்ளை நல்லப்பிள்ளையாக வளர வேண்டும் என்று நினைக்கும் தாய்க்கு கூடுதல் பொறுப்பு உண்டு. தாய் என்ற உலகத்தை தாண்டி வேறு உலகத்தை குழந்தை எட்டிப்பார்க்க துவங்கும் போது தாயின் கூடுதல் பொறுப்பு வேலை செய்ய துவங்கி விட வேண்டும்.

ஒரு மாணவன் சிறந்தவனாக உருவாக ஆசிரியருக்கு அதிக பொறுப்பு உண்டு. வகுப்பறையைக் கடந்து இதர மாணவர்களோடு அவன் கலக்கும் போது ஆசிரியரின் பொறுப்பு உஷார் நிலையை எட்டி விட வேண்டும்.

தன் குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசைப்படும் குடும்பத் தலைவனுக்கும் கூடுதல் பொறுப்பு உண்டு. பணத்திலோ - ஆடம்பரத்திலோ - சுக போகங்களிலோ குடும்பம் காலடி எடுத்து வைக்கும் வேலைகளில் இவனுடைய கரம் நீண்டு அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.

இந்த கூடுதல் பொறுப்பு குழந்தையையும், மாணவனையும், குடும்பத்தையும் இடற்பாடில்லாத அல்லது இடற்பாடு மிகக் குறைந்துப் போன ஒரு நல்லப் பாதையில் வழி நடத்தி செல்ல உதவும். உலகம் என்ற பகட்டுப் பல்லக்கில் மனிதன் ஊர்வலம் வர துவங்கி விட்டான். உச்சியில் ஊர்வலம் போகும் மனிதனுக்கு உலகம் அழகாகத் தெரியும். இந்த சந்தர்பங்களிலெல்லாம் அவன் பல்லக்கிலிருந்து தவறி விழுந்து விடாமலிருக்க அந்தப் பல்லக்கை இயக்குபவனுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. அந்த கூடுதல் பொறுப்பின் வெளிபாடுகளில் ஒன்றுதான் இந்த நோன்பு. இந்த பயிற்சியை முறையாகப் பெற்றால் வழி கேடுகள் என்ன வசீகரித்தாலும், உலகத்தின் பனிப் பாறைகள் பள்ளத்தாக்குகள் தன்னை நோக்கி ஈர்த்தாலும் பல்லக்கிலிருந்து தவறி விழும் அபாயம் நம்மை அண்டாது. சிந்திக்கும் மக்களுக்கு ரமளான் நல்லப் பயிற்சிக் கொடுக்கும்.

இறையச்சம் உலகில் மிகைக்கும் போது சாந்தி சமாதானம் எங்கும் வியாபித்து நிற்கும். இறையச்சமுள்ள மனிதன் பிற மனிதனுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்த மாட்டான். இதற்காக இஸ்லாம் பல்வேறு வழிகளில் மனிதனை பக்குவப்படுத்த வழிவகுக்கின்றது. அதில் ஒன்று நோன்பு. வருடந்தோரும் ஓராண்டு இந்த பயிற்சியில் ஒன்றிணையும் போது இந்தப் பயிற்சியின் தாக்கமும் விளைவும் வாழ்வில் பிரதிபளிக்கவே செய்யும்.

தீயவை அனைத்திலிருந்தும் ஒதுங்கும் மாதம் இது. பார்க்கும் சுதந்திரம் இருந்தும், கேட்கும் சுதந்திரம் இருந்தும், பேசும் சுதந்திரம் இருந்தும், சுவைக்கும் சுதந்திரம் இருந்தும் தனக்குள்ள சுதந்திரத்தைக் கூட இறைவனுக்காக புறந்தள்ளி வைக்கும் பயிற்சி. இறை வணக்கங்களிலும், இறை நினைவிலும் திளைத்திருக்கும் பயிற்சி. இந்தப் பயிற்சிகளில் ஈடுபடுவோர் வெறும் சில நூறுகளோ, சில லட்சங்களோ, ஏன் சில கோடிகளோ அல்ல. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தப் பயிற்சியை மேற்கொள்கிறார்கள். சிறுவர்களும் சிறுமிகளும் கூட இந்தப் பயிற்சியில் தன்னை விரும்பி இணைத்துக் கொண்டு குதூகளிக்கும் ஆனந்தம்.

நோன்பு விதிக்கப்பட்டுள்ளது. இறைநம்பிக்கையுள்ள மனிதன் தூய்மையடைய வேண்டும் என்பதற்காக.

எத்துனை நாட்கள்?

ரமளான் என்பது ஒரு மாதத்தின் பெயர் என்றாலும் சந்திர சுழற்சியை மையமாகக் கொண்ட மாதம் என்பதால் இறைவன் நோன்பிற்கான கால அளவை நாட்கள் என்றே குறிப்பிடுகிறான்.

எண்ணப்படும் நாட்களில் நோன்பு கடமையாகும். (அல்குர்ஆன் 2:184)

எண்ணப்படும் நாட்கள் என்பது 29 நாட்களாகவோ, 30 நாட்களாகவோ இருக்கலாம். துவக்கத்திற்கும் முடிவுக்கும் பிறைப் பார்த்தாக வேண்டும்.

பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள், பிறைப் பார்த்து நோன்பை விடுங்கள் என்று இறைத்தூதர் கூறியுள்ளார்கள். (அனைத்து நபிமொழி நூட்களிலும் இந்த செய்தி பதியப்பட்டுள்ளது).


சலுகையளிக்கப்பட்டவர்கள்.

மனித பலவீனங்களை கருத்தில் கொண்டு இறைவன் இஸ்லாமிய வரையறைகளில் பல்வேறு சலுகைகளை அளித்துள்ளான். நோன்பும் சிலருக்கு சலுகையளிக்கின்றது.

1)நோயாளிகள்.

நோன்பு நாட்களில் ஒருவர் நோய்வாய்படுகிறார். அது தலைவலியோ, காய்ச்சலோ, அல்லது வயிற்றுக் கோளாறுகளோ அல்லது இன்ன பிற எதோ ஒரு நோய். இந்த நோயின் தாக்கத்தால் அவதிப்படுபவர்கள் இந்த நோயால் நோன்பு வைக்க முடியாது அல்லது நோன்பு வைத்தால் நோயின் பாதிப்பு அதிகமாகும் என்று கருதுபவர்கள் நோயின் போது நோன்பு வைக்காமல் ரமளானுக்கு பிறகு நோயிலிருந்து குணமடைந்தவுடன் விடுபட்ட அனைத்து நோன்பையும் நோற்றுவிட வேண்டும்.

ஏமாறுவது நாமே!

இறைவன் பொதுவாக நோயாளி என்று தான் குறிப்பிடுகிறான். இன்ன இன்ன நோய்க்கு சலுகை என்று குர்ஆனிலோ சுன்னாவிலோ பட்டியல் எதுவும் இல்லை. எனவே தலைவலியிலிருந்து மரணப்படுக்கை வரையுள்ள அனைத்து நோயையும் இது உள்ளடக்கவே செய்யும். இந்த நோய், அந்த நோய் என்று வரையறைப் போடும் உரிமை எவருக்கும் இல்லை என்றாலும் முஸ்லிம்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

சாதாரணமாகவே நோன்பு வைக்கும் முதல் நாளில் சிலர் தலைவலிக்கு ஆட்படலாம். நோன்பு திறக்கும் பொழுதுகளில் அனைவருக்குமே ஒரு வித மயக்கம் ஏற்படும். பட்டினி இருக்கும் பொழுதுகளில் வயிற்றில் புரட்டல் போன்ற உணர்வுகள் ஏற்படவே செய்யும். இதையெல்லாம் நோய் என்ற பட்டியலில் கொண்டு வந்து 'தான் நோயாளி' என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டு நோன்பு வைக்காமல் இருப்பது அறிவுடமையாகாது. அப்படி செய்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலாகும். தலைவலி, மயக்கம் போன்ற நோய்கள் சில மணித் துளிகளில் மறைந்து விடக் கூடியதாகும். அதை காரணங்காட்டி நோன்பை முறித்துக் கொள்வது, அல்லது நோன்பு வைக்காமலிருப்பது நம்மீது நோன்பு என்ற கடனை அதிகப்படுத்தி விடும். தவிர்க்க முடியாத நிலை இருந்தால் மட்டுமே நோன்பை விட வேண்டும். பின் வரும் நாட்களில் நோற்கலாம்.

தொடர் நோய்.

முதுமை ஒரு தொடர் நோய். முதுமைக்கு ஆட்பட்டு விட்டவர்கள் மீண்டும் இளமைக்கு திரும்ப முடியாது என்பதால் நோன்பு வைப்பதை கடினமாக கருதும் முதுமையைப் பெற்றவர்கள் நோன்பு வைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. நீண்ட நேரம் எதுவும் சாப்பிடாமல் இருப்பது அவர்களின் பலவீனத்தை அதிகப்படுத்தி விடும் என்பதால் இவர்கள் நோன்பிலிருந்து விலக்குப் பெறுகிறார்கள். முதுமையைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது 'அறிவு பெற்று வாழ்ந்தும் பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்மூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்' என்று குறிப்பிடுகிறான். (அல்குர்ஆன் 22:5) இத்தகையவர்கள் மீது நோன்பு கடமையில்லை.

தொடர் நோய்க்குட்பட்ட இன்னும் சிலர் இருக்கிறார்கள்.

எயிட்ஸ் நோயாளிகள், எயிட்ஸ் தாக்கப்பட்ட எவரும் மரணத்தின் நாட்களை எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டவர்கள். தனது தவறான போக்கால் இந்த நோயைப் பெற்றுக் கொண்டாலும் இவர்கள் நோன்பிலிருந்து விலக்கு பெற முடியாது. ஏனெனில் நோன்பு வைத்தால் என்ன பலவீனம் ஏற்படுமோ அந்த பலவீனம் எயிட்ஸ் நோயாளிகளுக்கு ஏற்படாது. எனவே எயிட்ஸ் என்பது ஒரு தொடர் நோய் என்ற பொதுவான நிலையை வைத்துக் கொண்டு இவர்கள் நோன்பு வைக்காமல் இருக்க முடியாது. இவர்கள் அவசியம் நோன்புவைத்தாக வேண்டும்.

கோமா நிலைக்குத் தள்ளப்பட்டவர்களும் தொடர் நோயாளியாகக் கருதப்படுவார்கள். அவர்கள் முழு அளவு நோன்பிலிருந்து விதிவிலக்கு பெறுபவர்களல்ல. மீண்டும் தன் நிலைக்கு திரும்பினால் அவர்கள் மீது பழைய நோன்பு கடமையாகும்.

அல்சர் நோயின் தாக்கத்தைப் பெற்றவர்கள் இறை நினைவு மிக்க ஒரு முஸ்லிம் மருத்தவரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது நலம்.

பிரயாணிகளுக்கு சலுகை.

நோயாளிகளைப் போன்று பிரயாணிகளுக்கு உடல் நிலை பாதிப்பு இல்லை என்றாலும் பிரயாணிகள் வேறுபல பிரச்சனைகளை சந்திப்பதால் இஸ்லாம் பிரயாணிகள் குறித்து பல கருத்துக்களை முன் வைத்துள்ளது. அதிலொன்றுதான் பிரயாணிகள் நோன்பை விடலாம் என்ற சலுகை.

அன்றைய பிரயாணம் - இன்றைய பிரயாணம்.

பிரயாணத்தைப் பொருத்தவரை மனிதன் பெருமளவு முன்னேற்றத்தைப் பெற்று வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்டாலும் பிரயாணத்தில் ஏற்படும் களைப்பையும் வழியில் பல பிரச்சனைகளையும் சந்திக்கவே செய்கிறான். அன்றைக்கு ஒட்டகம், குதிரை, கழுதை போன்ற மிருகங்களை தங்கள் பிரயாண வாகனமாக அனைவரும் பயன்படுத்தினார்கள். இன்றைக்கும் அந்த மிருகங்கள் உலகில் பல நாடுகளில் பிரயாணத்திற்கு பயன்படவே செய்கின்றது.

பிரயாணம் செய்யும் வாகனங்களையெல்லாம் சிலர் கருத்தில் எடுத்துக் கொண்டு இன்றைய பிரயாணங்கள் பிரயாணங்களே அல்ல. மனிதன்; வீட்டில் இருக்கும் போது எப்படி இருக்கின்றானோ அதே நிலையை பிரயாணத்திலும் பெற்று விட்டான் என்றெல்லாம் விளக்கமளித்து இன்றைக்கு எந்த பிரயாணியும் நோன்பிலிருந்து சலுகைப் பெற முடியாது என்றெல்லாம் கூறுகிறார்கள். மேலைநாடுகளில் வசித்துக் கொண்டு ஏசி கார்களை கையில் வைத்துக் கொண்டு பிரயாணம் செய்பவர்களை பார்ப்பவர்கள் மட்டுமே இத்தகைய கருத்தை முன் வைக்க முடியும். (இருந்தாலும் அவர்களை பிரயாணி என்று சொல்லக் கூடாது என்ற கருத்து தவறாகும்).

இதில் பிரயாணம் செய்யும் வாகனங்களையெல்லாம் கருத்தில் எடுத்துக் கொண்டு பிரயாணியை தீர்மானிக்க வேண்டும் என்பதற்கு துணை ஆதாரங்கள் கூட ஒன்றும் கிடைக்கவில்லை. இன்றைக்கு விரைவு வாகனங்கள் இருப்பது போன்று அன்றைக்கு குதிரைகள் பயன்பட்டன. எனவே சொந்த ஊரிலிருந்து வெளியில் கிளம்பும் அனைவரும் பிரயாணியாகவே கருதப்படுவர்.

பிரயாணத்தில் இருப்பவர்கள் நோன்பு வைப்பது சிரமம் என்று கருதினால் அவர்கள் பிரயாணத்தின் போது நோன்பை விட்டு விட்டு பிரயாணம் இல்லாத மற்ற நாட்களில் கணக்கிட்டு நோற்று விட வேண்டும். சிலர் தினந்தோரும் பிரயாணம் செய்பவர்களாக இருப்பார்கள். உதாரணமாக வெளியூர் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள், தொழிலுக்காக வெளியூர் செல்பவர்கள் இவர்கள் தினந்தோரும் பிரயாணம் செய்பவர்களாக இருப்பதால் தொடர்;ச்சியாக நோன்பிலிருந்து விலக்கு பெறுவார்களா.. என்று சிலர் நினைக்கலாம். நிரந்தர நோயாளிகளைப் போன்று நிரந்தர பிரயாணி என்று எவருமில்லை. எனவே பிரயாணிகள் பிற நாட்களில் நோன்பை நோற்க வேண்டிய நிலையிலுள்ளவர்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தினந்தோரும் பிரயாணத்தை காரணங்காட்டி இவர்கள் நோன்பை விட்டால் வரும் நாட்களில் இவர்கள் நோன்பை நோற்க முடியாமல் போய்விடும் நிலை ஏற்படும். ஏனெனில் ரமளானுக்கு பிறகும் இவர்களின் தின பிரயாணம் தொடரவே செய்யும்.

நோன்பு காலங்களிலேயே நோன்பை வைத்து விடுவதுதான் இவர்களைப் போன்றவர்களுக்கு இலகுவாகும். ஏனெனில் கடமையான மாதம் என்ற எண்ணத்தில் பொழுது கழியும். பிற மதத்தவர்களும் இது முஸ்லிம்களுக்கு நோன்பு மாதம் என்று தெரிவதால் அலுவல்களில் முஸ்லிம்களுக்கு வேலையில் உதவி புரிவார்கள். தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைக்கும். ரமளான் கழிந்து நோன்பு வைப்பவர்கள் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்பதால் அவர்கள் நோன்பு வைத்து விடுவதுதான் சிறந்தது.

நபி(ஸல்) பிரயாணத்தின் போது நோன்போடு இருந்தும், நோன்பை விட்டும் வழிகாட்டியுள்ளார்கள். எனினும் உலகில் உள்ள அனைவரையும் விட அவர்கள் இறைவனை அதிகம் அஞ்சியதால் விடுபட்ட நோன்புகளை நோற்க மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டு அந்தக் கடமையை நிறைவேற்றினார்கள். இன்றைக்கு நோன்பு என்ற சூழ்நிலை நிலவும் போதே நோன்பு வைப்பது சிரமம் என்று கருதுபவர்கள் பிற நாட்களில் அதை தவறவிட்டு விடும் அபாயம் உள்ளதால் அந்தக் கடமையை அதற்குரிய நாட்களில் நிறைவேற்றி விடுவதுதான் நல்லது.

நோன்பும் - பெண்களும்

நோயாளிகள் - பிரயாணிகள் என்ற பொது சலுகையில் அந்த நிலையைப் பெற்ற பெண்களும் அடங்குவார்கள் என்றாலும் பெண்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு இன்னும் சிலரும் சலுகைப் பெறுகிறார்கள்.

மாதவிலக்கு.

பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலவீனத்தை ஏற்படுத்தும் நாட்கள் மாவிலக்கு நாட்கள். எனவே அந்த சந்தர்பங்களில் அவர்கள் கூடுதல் பலவீனத்தை அடைந்து விடக் கூடாது என்பதால் மாதவிலக்கு நாட்களில் நோன்பு வைப்பதிலிருந்து இஸ்லாம் சலுகையளித்துள்ளது.

நாங்கள் மாதவிலக்கு நாட்களில் தொழுகையையும் நோன்பையும் விட்டுவிடுமாறும் பிற நாட்களில் நோன்பை மட்டும் நோற்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டுள்ளோம் என நம்பிக்கையாளர்களின் தாயார் ஆய்ஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (அனைத்து ஹதீஸ் நூல்களிலும் இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது)

மாதவிலக்கிற்கான விளக்கங்கள்.

சாராசரியாக குறிப்பிட்ட நாட்களில் மாதவிடாய் ஏற்படும் பெண்கள் மாதவிடாய் ஏற்படும் நேரத்தை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் அன்றைய தினம் முன் கூட்டியே நோன்பை விட்டு விடலாம். உதாரணமாக ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மாதவிலக்கு ஏற்படும் பெண் நோன்பு மாதத்திலும் அதே நாளில் இன்றைக்கு மாதவிலக்கு ஏற்படும் என்று தெளிவாக தெரிந்தால் நோன்பு வைக்கமால் இருந்து விடலாம். ஆனால் அன்றைய தினம் நோன்பு முடிந்த பிறகுதான் மாதவிலக்கு ஏற்படும் (உதாரணமாக இரவு 7மணிக்கு) என்று தெரிந்தால் அத்தகைய பெண்கள் அன்றைய தினம் நோன்பை வைத்து விட வேண்டும்.

மாதவிலக்கு நாட்களில் கோளாறு உள்ளப் பெண்கள் மாதவிடாய் ஏற்படும் வரை நோன்பை விடக் கூடாது. உதாரணமாக இன்றைக்கு அல்லது நாளைக்கு மாதவிடாய் ஏற்படலாம் என்று நம்பும் பெண்கள் அந்த சந்தேகத்திற்காக நோன்பை விட்டு விடக் கூடாது. இன்றைக்கு ஏற்படலாம் என்று எண்ணி நோன்பை விட்டு விட்டு அன்றைக்கு மாதவிலக்கு ஏற்படவில்லை என்றால் அந்த நோன்பு களாவாகி விடும். எனவே இத்தகைய பெண்கள் நோன்பை தொடர்ந்து விட வேண்டும். இத்தகைய நிலையில் உள்ள பெண் நோன்பு வைத்துள்ளார் அன்றைய பொழுது மாதவிலக்கு வந்து விடுகிறது என்றால் தானாகவே நோன்பு முறிந்து விடும். பிறகு அதை களா செய்ய வேண்டும். இந்த மாதவிலக்கு நோன்பு திறப்பதற்கு முன் எந்த நேரத்தில் ஏற்பட்டாலும் (நோன்பு முடிய 5 நிமிடங்களே உள்ள நிலையில் மாதவிலக்கு ஏற்பட்டாலும்) நோன்பு முறிந்து விடும். அதை களா செய்ய வேண்டும்.

தொடர் இரத்தப் போக்கு.

சிலர் அபூர்வமாக இந் நிலைக்கு ஆட்படுவார்கள். அதை மாவிடாய் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. தொடர் இரத்தப் போக்கு என்பது ஒரு நரம்பு நோயின் தன்மையாகும். இந்த நிலையை அடைந்தவர்கள் தொழுகையையோ, நோன்பையோ விட்டு விட அனுமதியில்லை.

தொடர் இரத்தப் போக்கு ஏற்பட்ட பாத்திமா பின்த் கைஸ் என்ற நபித்தோழிக்கு இறைவனின் தூதர் தொழுகையிலிருந்து விலக்கு அளிக்கவில்லை. குளித்து விட்டு தொழுமாறு வழிகாட்டியுள்ளார்கள். வழக்கமாக மாதவிடாய் ஏற்படும் நாட்களை கணக்கிட்டு அந்த நாட்களில் தொழுகையை விட்டு விடுமாறு பணிந்துள்ளார்கள்.

தொடர் உதிரப் போக்கு ஏற்படும் பெண்கள் அந்த நோயால் பலவீனம் அடையவில்லை என்றால் அவர்கள் நோன்பு நோற்க வேண்டும். இரத்தம் வெளியேறுவதை கருத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒருவேளை இந்த தொடர் உதிரப் போக்கு தாங்க முடியாத பலவீனத்தை கொடுக்கின்றதென்றால் அத்தகையப் பெண்கள் 'தொடர் நோயாளி'யாகக் கருதப்படுவார்கள். அவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்.

மாதவிடாய் ஏற்பட்டப் பெண்கள் நோன்பை விட்டு விட்டு பிறகு களா செய்ய வேண்டும் என்பதற்கு நேரடியாக ஹதீஸ் இருப்பதுப் போன்று கர்ப்பிணி - பாலூட்டும் பெண்கள் நோன்பை களா செய்யலாம் என்பதற்கு நாம் தேடி பார்த்த வரை எந்த ஒரு ஹதீஸூம் கிடைக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: இன்னல்லாஹ அஸ்ஸவஜல்ல வழஅ அனில் முஸாபிரி அஸ்ஸவ்ம வஷத்றஸ் ஸலாத்த வஅனில் ஹூப்லா வல்முர்ளிஇ அஸ்ஸவ்ம. அல்லாஹூ கர்பிணித் தாய்கும் பாலூட்டும் தாய்கும் நோன்பை அகற்றி விட்டான் என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள்.

அல்லாஹ் விலக்களித்துள்ளான் என்பது நிரந்தரமானதா.. தற்காலிகமானதா.. என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களை பொருத்தவரை அவர்கள் சூழ்நிலையை அணுசரித்தே முடிவெடுக்க வேண்டும் என்பதே நமக்கு சரியாகப்படுகின்றது.

அல்லாஹ் நோயாளிகளுக்கும் பிரயாணிகளுக்கும் சலுகையளித்துள்ளான். கர்ப்பிணி பெண்களும் சலுகைப் பெருகிறார்கள் என்று நபி(ஸல்) விளக்கியுள்ளார்கள். நோயாளிகளிலும், பிரயாணிகளிலும் தற்காலிக சலுகையும் நிரந்தர சலுகையும் பெற்றவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் இந்த பெண்கள் யாரோடு ஒத்துப் போவர்கள் என்பதை பார்ப்போம்.

பிரயாணிகளின் நிலையும் கர்ப்பிணிப் பெண்களின் நிலையும் வெவ்வேறானவை என்று நாம் சிந்தித்தால் நோயாளிகளைப் பற்றி பேசும் வசனம் இவர்களுடன் ஒத்துத்தான் போகும்.

உங்களில் எவரேனும் பிரயாணத்திலோ அல்லது நோயாளியாகவோ இருந்தால் அவர் வேறு நாட்களில் நோற்றுவிடவும். (அல் குர்ஆன் 2:184,185)

நோயாளிகளும் - கர்ப்பிணிகளும்.

நோயளிகளுக்கு நோன்பு தேவையில்லை என்று சொல்வதற்கு நியாயம் இருந்தும் இறைவன் அவர்களுக்கு நிரந்தர விலக்களிக்கவில்லை. நோயிலிருந்து விடுபட்டவுடன் நோற்க வேண்டும் என்று கூறி விட்டான். நோயாளிகளுக்கே இதுதான் நிலவரம் என்றால் கற்பிணிகளுக்கோ - பாலூட்டுபவர்களுக்கோ முழுவதுமாக விலக்களித்திருக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் கர்ப்பிணி - பாலூட்டுபவளை விட நோயாளிகளே அதிக சிரமத்திற்குள்ளாகுபவர்கள். நோன்பிலிருந்து முழுதும் விலக்களிக்க தகுதியுள்ளவர்கள் இவர்கள் தான். இவர்களையே இறைவன் பின் வரும் நாட்களில் நோன்பை பூர்த்தி செய்யுங்கள் என்று சொல்லியுள்ளதால் இந்த வசனத்திற்கு முரண்படாமல் அந்த ஹதீஸை விளங்குவதுதான் பொருத்தமானதாகும்.

தொடர் நோயாளிகளும் - தொடர் கர்ப்பிணிகளும்.

நோயாளிகள் பின்வரும் நாட்களில் நோன்பை நோற்கலாம் என்றால் அவர்கள் நோயிலிருந்து விடுதலைப் பெற வேண்டும். சுகம் பெற முடியாத அளவிற்கு தொடர் நோயால் தாக்கப்பட்டவர்கள் (உதாரணமாக முதுமை - வயிற்றுப் பிரச்சனைகள் போன்றவற்றை சொல்லலாம்) ஒவ்வொரு நோன்புக்கு பகரமாகவும் ஒரு ஏழைக்கு உணவளித்து விடவேண்டும். இதை 2:184 வசனத்திலிருந்து விளங்கலாம்.

இதே நிலை கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஒத்துதான் போகும். எப்படி என்றால், கர்ப்பம் தரித்ததிலிருந்து குழந்தைப் பெற்றெடுத்து பாலூட்டி முடியும் வரை மூன்று வருடத்துடைய, குறைந்த பட்சம் இரண்டு வருடத்துடைய நோன்பு அவளுக்கு விடுபட்டுப் போய் விடும். அதன் பிறகு அவள் தொண்ணூரு நாட்கள் - குறைந்த பட்சம் அறுபது நாட்கள் நோன்பு நோற்க வேண்டி வரும். இதுவே அவளுக்கு சுமை என்றாலும் அந்த சந்தர்பத்தில் அவள் அடுத்த கர்ப்பம் தரித்து விட்டால் மீண்டும் இரண்டு மூன்று மாத நோன்புகள் கணக்கில் வந்து நின்று விடும். அவள் காலம் முழுதும் நோன்பு நோற்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். இஸ்லாத்தில் உள்ள எந்த ஒரு வணக்கமும் மனிதர்களை இப்படி தொடர் சிரமத்திற்கு உள்ளாக்குவது போன்று கடமையாக்கப்படவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த வெளிப்படையான விஷயம்.

தொடர் நோயாளிகளைப் போன்று தொடர் கர்ப்பம் பாலூட்டல் போன்ற கடமைகளால் சிரமப்படும் பெண்கள் நோன்பிற்கு பகரமாக ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு உணவளித்து விடலாம் என்பதே நமக்கு சரியாகப் படுகிறது. சிரமத்தை உணராத பெண்கள் - சிரமத்தை பொருட்படுத்தாத பெண்கள் நோன்பு நோற்பதைப் பற்றி ஆட்சேபனையில்லை.

2:185 வது வசனத்தில் வரும் 'இறைவன் உங்களுக்கு இலகுவானதையே நாடுகிறான் அவன் உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தவில்லை' என்ற சொற்சொடரை ஒன்றுக்கு பல முறை சிந்தித்தால் நம்முடைய கருத்து சரியானதுதான் என்பது தெளிவாகும்.

குழந்தைக்கு பாலூட்டக் கூடிய தாயிடம் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் 'நீ நோன்பு நோற்கும் சக்தி இல்லாதவள்தான் அதனால் ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு உணவு கொடுத்து விடு' என்று கூறியுள்ளார்கள். (தாரகுத்னி - தப்ரி விரிவுரை)

எனவே கர்ப்பிணி - பாலூட்டும் பெண்கள் நோன்பை களா செய்து தான் ஆக வேண்டும் என்று வலியுறுத்த நம்மிடம் ஆதாரமில்லை (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)

முடியாதவர்களுக்குப் பரிகாரம் என்ன?

சில சட்டங்களில் இஸ்லாம் சிலருக்கு சலுகையளிக்கின்றது. சலுகையையும் பயன்படுத்த முடியாத அளவிற்கு பலவீனமானவர்கள் பரிகாரம் செய்யலாம் என்ற சட்டத்தையும் இஸ்லாம் முன் வைக்கின்றது.

மேற்கண்ட விளக்கங்களுக்கான ஆதார குர்ஆன் வசனத்தை இப்போது பார்ப்போம்.

எண்ணப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால், எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்து (நோன்பிருப்பதை சிரமமாகக் கருதினால் நோன்பை விட்டு விட்டு) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. (நோன்பு வைக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - (இருப்பினும்) நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும். (அல் குர்ஆன் 2:184).

1) நோன்பு கடமையாகும்

2) சில காரணங்களால் அந்த சந்தர்பங்களில் நோன்பிருக்க முடியாதவர்கள் அதை பின்னர் களா செய்ய வேண்டும்

3) நோன்பு வைக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். (ஒரு நோன்புக்கு பரிகாரமாக ஒரு எழைக்கு உணவு)

4) பரிகாரம் செய்பவர்கள் விரும்பினால் அதிகமாகவும் செய்யலாம்.

5) என்னத்தான் பரிகாரத்திற்கு இறைவன் வழிகாட்டினாலும் அவன் நோன்பு வைப்பதையே விரும்புகிறான்.

இந்த ஐந்து சட்டங்களும் இந்த வசனத்தில் பொதிந்துள்ளன.

நோன்பு வைக்க முடியாத முதியவர்கள், தொடர் நோயாளிகள் தினமும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்பதை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். 'உணவு' என்றவுடன் உணவு சமைத்து ஏழையை அழைத்து வந்து உண்ணவைக்க வேண்டும் என்று நாம் விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இவர்கள் எந்த ஏழையை அழைக்கின்றார்களோ அந்த ஏழைகளும் நோன்பு வைத்தவர்களாக இருக்கும் வாய்ப்புள்ளது. எனவே உணவு என்பதை சமைக்காத உணவுப் பொருள் (உதாரணமாக அரிசி, காய்கரி வகைகள், மாமிச வகைகள்) மற்றும் அதற்கான பொருளாதாரம் என்றுதான் புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லது இவர்களைப் போன்று நோன்பு வைக்க முடியாத நிலையில் உள்ள வசதி வாய்ப்பற்ற ஏழைகளுக்கு உணவளிக்கலாம்.

இறைவன், அவன் மார்க்கத்தை விளங்கிப் பின்பற்றி அவன் நேசத்தைப் பெற்றுக் கொண்டிருக்கும் கூட்டத்தில் நம்மையும் ஆக்கி வைப்பானாக.

Article From :www.tamilmuslim.com